ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மெழுகால் ஆன விராட் கோலியின் முழு உருவச் சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. பொதுவாகவே கிரிக்கெட் மற்றும் சினிமாவை பொறுத்த வரையில் ரசிகர்களுக்குப் பிடித்தவர்களாக இருந்துவிட்டாலே அவர்களை கொண்டாடி விடுவார்கள்.
மேலும், அவர்கள் மீதான அன்பை வெளிக்காட்ட கோயில் கட்டுவது, சிலை வடிக்கவும் செய்வார்கள். அப்படி கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலிக்குப் பல நாடுகளில் மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு, ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மெழுகால் ஆன விராட் கோலியின் முழு உருவச் சிலை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.
விராட் கோலியின் உருவச் சிலையை நிறுவ குழந்தைகளும் இளைஞர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் 268 மில்லியன் ரசிகர்களைக் கொண்ட இவருக்கு நிஜத்தில் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்து வரும் இவர் விளையாட்டில் பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக உள்ளார்.