இந்தியா உடனான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதில், நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனா உடனான உறவு இந்தியாவுக்கு முக்கியம் என்றும், எல்லையில் நிலவும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சமீபத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “பிரதமர் மோடியின் கருத்துகளை சீன அரசு முக்கியமானதாக கருதுகிறது.
இந்தியா, சீனா இடையே வலுவான, நிலையான உறவு நீடிப்பது இரண்டு நாடுகளுக்கும் நல்லது. அது மட்டுமன்றி இரு நாடுகள் இடையே நல்லுறவு நீடித்தால், இந்த பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் ஊக்கம் பெறும்.
எல்லையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும், சீனாவும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் தொடர்பில் உள்ளன. இதில், நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் நலனுக்கும், துடிப்பான மற்றும் நிலையான உறவு முக்கியம் என்பதில், சீனா உறுதியுடன் இருக்கிறது.
இருதரப்பு உறவுகளில், எல்லைப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கவும், அதனை சரியாக நிர்வகிக்கவும் இந்தியா எங்களுடன் இணைந்து, செயல்படும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.