சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை, காப்பாற்றுவதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பெரோக் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு குடும்பத்தினரிடம் ஓட்டுநராக பணிபுரிந்தார்.
அக்குடும்பத்தினருடன், அப்துல் ரஹீமுக்கு பிரச்னை ஏற்பட்டது. அப்போது, ஏற்பட்ட சண்டையில், முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவி துண்டிக்கப்பட்டு, அந்த சிறுவன் உயிரிழந்தான்.
இதனையடுத்து, அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அச்சிறுவனின் இறப்புக்கு ஈடாக, இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி ரூபாய் பெற்றுக் கொள்வதாக, சிறுவனின் குடும்பத்தினர் சம்மதித்தனர். இந்த தொகையை வழங்கினால், அப்துல் ரஹீம் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, அவருடைய நண்பர்களும், உறவினர்களும் இணைந்து, நிதியை திரட்ட ஆரம்பித்தனர். இதற்காக, ஓர் அமைப்பையும் உருவாக்கினர். அவர்கள், சிறுவனின் மரணம் தற்செயலானது என்றும் அது வேண்டுமென்றே நடத்தப்படவில்லை என்றும் கூறி நிதியைத் திரட்டினர்.
மேலும், ‘சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கி, நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அங்கு இருக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் தங்களால் இயன்ற நிதியை வழங்கினர்.
இந்த நிலையில், கடந்த வாரம் தேவைப்பட்ட நிதியை விட கூடுதல் நிதி கிடைத்தது. இதன் மூலம், அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.