லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலால் காஸா நகரமே உருக்குலைந்துள்ளது. மேலும், ரஃபா நகருக்குள் நுழைந்து இஸ்ரேல் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது.
இதற்கிடையே, கடந்த 1-ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலை எச்சரித்தது. பதிலுக்கு இஸ்ரேலும், ஈரான் தாக்குதல் நடத்தினால், நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என்னும் எச்சரித்தது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுக்கிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினர் 40-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இருந்தபோதிலும், இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு அந்த ராக்கெட்டுகளை நடுவானில் தாக்கி அழித்தது.
இதற்கு பதிலடியாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
சிரியாவில் உள்ள தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எப்போதும் வேண்டுமானாலும், ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என்பதால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.