நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.
தேர்தலில் 1.7 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் புகார் வந்தால் 5 நிமிடங்களில் போலீசார் விரைந்து செல்ல முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த முறை பொதுக்கூட்டம், வாகன பேரணி, பேரணி, தெருமுனைக் கூட்டங்கள் என்று பல்வேறு வகையான பிரசாரங்கள் அமைதியான முறையில் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பிரசாரம் முடிய 3 நாட்களே உள்ளன. புதன்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் சேர்ந்து 717 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 712 கண்காணிப்பு படையும் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் பறக்கும் படையினர் பண விநியோகம், முறைகேடு குறித்து சோதனை நடத்துவார்கள். கண்காணிப்பு குழுவினர் வேட்பாளரின் செலவு குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு 1.70 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். அதில் 190 மத்திய பாதுகாப்பு படையினரும் பயன்படுத்தப்பட உள்ளனர். குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர்.
தேர்தல் முடிந்த பிறகு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்படும்.