ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், “இந்தியர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முதன்மையானது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமையகத்தில் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “பாஜக அரசு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இது உலகளாவிய சவால்களை வழிநடத்தவும், போரில் சிக்கித் தவிக்கும் இந்திய பூர்வீக மக்களை மீட்கவும் உதவும்.
போர் பற்றிய அச்சம் உலகை வாட்டி வதைக்கும் நேரத்தில், இந்தியாவில் பெரும்பான்மையுடன் வலுவான அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமானது. நாட்டை பொருளாதார ரீதியாக வலிமையடையச் செய்யும் ஒரு அரசாங்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நமது இறுதி இலக்கான வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.
இன்று உலகம் முழுவதும் பல பிராந்தியங்களில் போர் ஏற்படும் சூழல் நிலவி வருவதால் உலகமே பதற்றமாக இருக்கிறது. அமைதியான சூழலே இல்லை. இதுபோன்ற சமயங்களில், நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக முக்கியமான பணியாகும். இந்தியர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முதன்மையானது” என்றார்.
அண்மையில், ரஷ்யா தொடுத்த போரினால், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு மீட்டது குறிப்பிடத்தக்கது.