இந்தியாவில் 18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அரசு ஊழியர்கள், அதிகாாிகள், போலீசார் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியான நிமிடம் முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின்னர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
அதில், தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின்பு, தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டமோ அல்லது ஊர்வலமோ ஏதும் நடத்த கூடாது.
தேர்தல் சம்பந்தமாக சினிமா தியேட்டர் மூலமாகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது ரேடியா மூலமாகவோ மற்றும் சமூக வலைதளங்களிலோ தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, வாக்காளர் அல்லாதவர்கள் ஏப்ரல் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், தொகுதியில் இருந்து உடனே வெளியேற வேண்டும். தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம், திருமண மண்டபங்கள் மற்றும் சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் வெளியாட்கள் யாரும் தங்க கூடாது. அனைவரும் உடனே வெளியேற வேண்டும் என்கிறது தேர்தல் விதி.
மேலும், ஒரு தொகுதியின் மக்களவை உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் வேறு தொகுதியில் வாக்காளர்களாக இருந்தால், அவரை வெளியேற்ற கூடாது. வாக்குப்பதிவு அன்று அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கோ அல்லது போலீசாருக்கோ தொந்தரவு கொடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பேட்ஜ் அல்லது அடையாள அட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வாக்கு சாவடிகளுக்கு அருகில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேவையற்ற கூட்டத்தைக் கூட்டக்கூடாது.
வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களுக்கு தேர்தல் தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் அதனை மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் பார்வையாளர் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
டிஜிட்டல் புரட்சியின் அடையாளமாக செயல்படும் சி-விஜில் செயலி மூலமும் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.