இது சாதாரண தேர்தல் அல்ல மக்களின் ஆசியுடன் நடைபெறும் தேர்தல் என முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 102 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக மூத்த உறுப்பினர்கள், காங்கிரஸின் 5 முதல் 6 தசாப்த கால ஆட்சியில் தாங்கள் அனுபவித்த சிரமங்களை நினைவில் கொள்வார்கள் என தெரிவித்திருந்தார்.
குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டுள்ள முடிவை வாழ்த்துவதாகவும், மக்களின் ஆசியுடன், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில்,
”என் அருமையான காரியகர்த்தாவே. ராம நவமி தினத்தில் இந்தக் கடிதத்தை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மதிப்புமிக்க பணியை (ஐ.பி.எஸ்) விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவையாற்ற உறுதி எடுத்துள்ள உங்கள் முடிவுக்கு நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு முழவதம் பா.ஜ.க அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தி, இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கியது உள்ளிட்டவற்றின் மூலம் நீங்கள் முக்கிய பங்காக உள்ளீர்கள். உங்களின் அர்ப்பணிப்பால் கோவை நிச்சயம் லாபம் பெறும்.
கோவை மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை போன்றவர்கள் தான் எனக்கான பெரும் சொத்து. ஒரு குழுவாக, தொகுதியாக நாட்டு மக்களின் நலனுக்காக நாம் எதையும் விட்டு கொடுக்க மாட்டோம்.
இது சாதாரண தேர்தல் அல்ல. இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக முதியவர்கள் காங்கிரஸ் கட்சியால் கடந்த 50 முதல் 60 ஆண்டுகால ஆட்சியில் அனுபவித்த சிரமங்களை நினைவில் வைத்துக் கொள்வார்கள். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக அனைவரும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான நமது பணி என்பது இந்த தேர்தல் மூலம் தொடரும்.
இந்த தேர்தல் என்பது நமது பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்கும் பாலமாகும். பா.ஜ.க பெறும் ஒவ்வொரு வாக்கும் மத்தியில் நிலையான அரசை அமைப்பதை நோக்கி செல்லும். அதுமட்டுமின்றி 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பயணத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும்.
கடைசி நேரத்தில், நீங்களும் மற்ற நிர்வாகிகளும் தேர்தல் வேலைகளில் பிசியாக இருப்பீர்கள், இருப்பினும் உங்கள் உடல் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் நாட்டிற்கு இது முக்கியமான தேர்தல், எனவே வெயில் தொடங்குவதற்கு முன்பே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள்,” இவ்வாறு மோடி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்ற பாஜக வேட்பாளர்களான பாரிவேந்தர், பால்கனராஜ் ஆகியோருக்கும் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.