புதுக்கோட்டையில் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதிகளில் குடிநீர் வந்து ஒரு மாதமான நிலையில் பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தற்போது புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 15 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆறாவது வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் ஒரு குடம் பத்து ரூபாய் கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் குடிநீருக்கு திண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வராத கண்டித்து தற்போது புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோகரணம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சிகள் வாக்கு கேட்பதற்கு மட்டும் வீடு வீடாக வந்து, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறோம் என்று கூறி வாக்குகளை சேகரித்து ஓட்டுகளை பெற்றுவிட்டு எங்களுடைய குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கு எந்த ஒரு அரசியல் வாதியும் களத்தில் இறங்கி வரவில்லை என்று பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர்.
வாக்குப்பதிவு முடிந்து இன்னமும் 24 மணி நேரமே முடிவடையாத நிலையில் அரசியல் வாதிகள் மீது பொதுமக்கள் கோபம் கொண்டு களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களிடம் நகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும் பொதுமக்கள் ஆக்ரோஷத்துடன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.