தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான 14 நாள் கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக கோடைகால ஹாக்கி பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி வ.உ.சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று முதல் 14 நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரன் கலந்து கொண்டு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரன் ஹாக்கி விளையாட்டு நுணுக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மே மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சி முகாமில் முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் முகமது ரியாஸ் , அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர்.
பயிற்சி முகாம் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தினமும் காலையும் மாலையும் பால் , முட்டை வாழைப்பழம், முளைத்த பயிர் ஆகியவை வழங்கப்படும்.
தோல்வியில் இருந்து மீள்வது எப்படி என்பதை பற்றி வீரர்களுக்கு மனநல நிபுணர் பாலாஜி அவர்கள் தலைமையில் வகுப்பு நடைபெறவுள்ளது.
பயிற்சியாளர்களாக மகேஷ் குமார், பிரேம்குமார், விபின் காந்த், கௌதமன் பயிற்சி அளிக்கவுள்ளனர். இறுதி நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது