சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்துப் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகச் சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் என்பவர், தனது நண்பர்களுடன் காரைக்குடிக்கு வந்து, 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார்.
சந்தேகம் அடைந்த அடகுக் கடை உரிமையாளர் விக்னேஷ், அப்பகுதி நகை வியாபாரிகளுடன் சேர்ந்து நாச்சியப்பனை பிடித்து வைத்துக் கொண்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறை, நாச்சியப்பனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், நாச்சியப்பன் தனது நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து, இது போன்று போலி நகைகளை அடகு வைத்துப் பல ஊர்களில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
உடனடியாக நாச்சியப்பனையும், அவரது நண்பர்கள் ஏழு பேரையும் கைது செய்த காவல்துறை, அவர்கள் கொண்டு வந்த 147 கிராம் போலி நகைகளையும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.