தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அனுமதியின்றி செயல்படும் சாலையோரக் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடத்தவுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.
இந்தப் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தற்காலிக ஆக்கிரமிப்புகள் வரும் 9-ம் தேதி அகற்றப்படும், பிற கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு போராட்டத்தைக் கைவிட்டுள்ளது.