ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைச் சட்ட விரோதமாக ஃபேர்பிளே பந்தயச் செயலி மூலம் நேரலையில் ஒளிபரப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதன் பின்னணி என்ன? என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய ஃபேர்பிளே என்னும் செயலி , மகாதேவ் பந்தய செயலி நிறுவனத்தின் பல துணை செயலிகளில் ஒன்றாகும். இது கிரிக்கெட், சீட்டாட்டம், பேட்மிட்டன், டென்னிஸ் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு சட்டவிரோதமாக பந்தயம் கட்டுவதற்கான செயலியாகும்.
கடந்தாண்டு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் தற்போது இருக்கும் சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் தொடங்கிய நிறுவனம்தான் இந்த மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி. இந்த செயலி தொடர்பான புகார்களின் எதிரொலியாக, மஹாதேவ் புக் ஆன்லைன் உட்பட 22 சட்டவிரோத பந்தய பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களை மத்திய அரசு தடை செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஏறத்தாழ 6000 கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில் மகா தேவ் பந்தய செயலியின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியா முழுவதும் 30 கிளைகளுடன் இயங்கிய இந்த செயலியின் ஒரு கிளையின் ஒரு மாத வருமானம் 200 கோடி ரூபாய் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
சந்திரகர் கைதாகும் போது மகா தேவ் பந்தய செயலியின் வணிகம் பெருமளவில் வளர்ந்து சுமார் 2,000 கிளைகள் உலகமெங்கும் இருந்தன என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது .
அமலாக்கத் துறை விசாரணையில் இந்த பந்தய செயலி மூலம் துபாய்க்கு ஏராளமான பணம் ஹவாலா வழியாக சட்ட விரோதமாக அனுப்பப்பட்டுள்ளது. தாவூத் இப்ராஹிமின் கும்பலின் உதவியுடன் துபாயில் இருந்து மகாதேவ் புக் செயலி செயல்பாட்டை நடத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு சம்பந்தமாக ரன்பீர் கபூர் , யாமி கௌதம் , ஷ்ரத்தா கபூர் , கபில் சர்மா , ஹீனா கான் , நோரா , சன்னி லியோன் என பல இந்தி நடிகர், நடிகர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது.
இதன் உச்ச கட்டமாக , சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும் இந்த மகா தேவ் பந்தய செயலிமூலம் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் தொடர்பு இருக்கிறது என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.
இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை ஃபேர்பிளே பந்தய செயலியில் சட்ட விரோதமாக ஒளிப்பரப்பு செய்தது. இதனால் தங்கள் நிறுவணத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகாரளித்துள்ளது. மேலும் , ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடித்த நடிகை தமன்னா உட்பட அனைத்து நடிகர்கள் மீதும் புகார் கொடுக்கப்பட்டது .
இதன் தொடர்ச்சியாக, தற்போது தமன்னாவிற்கும் வரும் ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகும்படி மகாராஷ்டிரா சைபர் கிரைம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த மகா தேவ் பந்தய செயலி வழக்கில் இதுவரை 250க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் திரைப் பிரபலங்கள் என பலர் விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார்கள் .
நடிகை தமன்னாவுக்கு சம்மன் என்ற செய்தி தென்னிந்திய திரை உலகில் உள்ளவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.