நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து, சில நாட்களிலேயே வடகிழக்கு பருவ மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மே 13-ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்ட நிலையில், தற்போது சிவகங்கை என பெயர் கொண்ட கப்பல் இயக்கப்படவுள்ளது.
வரும் மே10-ம் தேதி நாகை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலின் கீழ்தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.