வேங்கைவயலைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மத்தியில் நல்லாட்சி நடைபெறுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதாவது கூறி வருவதாகவும், பாஜக ஆட்சியிலேயே தமிழகத்திற்கு நிதியும், நீதியும் கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் காங்கிரசாரை விட ஸ்டாலினே அதிக உரிமை கொண்டாடுவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
வேங்கைவயலை தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்திலும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் பாராமுகமாக செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.