இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக வெளியான வீடியோ விவகாரத்தில் அசாமில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாக போலி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது.
அந்த வீடியோவில், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என அமித்ஷா பேசுவது போல் காட்சிகள் திரித்து தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை தயாரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பிலும், உள்துறை அமைச்சகம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த்த ரெட்டி உள்ளிட்ட 4 பேரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் அசாமை சேர்ந்த ரிதோம் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.