கனடாவில் நடைபெற்ற சீக்கியர்களின் நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்டவிவகாரத்தில் கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் டொரன்ட்டோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கனடா வாழ் சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசத் தொடங்கியபோது காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதற்குக் கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், கனடா பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த செயல்கள் இந்தியா-கனடா இடையிலான உறவுகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கனடாவில் வன்முறைக்கான சூழல் ஏற்பட வாய்ப்பளிப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கான கனடா துணை தூதர் ஸ்டீவர்ட் வீலருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.