கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் நேற்று (ஏப்.29) தீர்ப்பளித்தது. அப்போது நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், “தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க, தண்டனையை நாளைக்கு (ஏப்.30) ஒத்திவைக்க வேண்டும்” என வாதிட்டார். அதன்படி, தண்டனை விவரம் அறிவிப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்று நிர்மலா தேவி மற்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நிர்மலா தேவியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதி அம்மாள், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் நிர்மலா தேவியை விருதுநகர் சிறையில் அடைத்தனர்.