நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், நேற்று இரவு தேவராயபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பகவதி என்பவர், தனது வீட்டிற்கு சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சிக்கன் ரைஸை, பகவதியின் தாய் நித்யா மற்றும் அவரது தாத்தா சண்முகம் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். உணவருந்திய சிறிது நேரத்திலேயே இருவருக்கும் கடும் வயிற்று போக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன், உணவகத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உமா, உணவகத்திற்கு பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், உணவக உரிமையாளர் ஜீவானந்தத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.