தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை நாயகனாக ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்றழைக்கப்படும் நடிகர் அஜித் குமாரின் “தீனா” மற்றும் “பில்லா” திரைப்படம் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ரீ-ரிலீஸ் செய்யபட்டு உள்ளது.
பில்லா திரைப்படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 1980ல் ரஜினி நடித்த ‘பில்லா’ படத்தின் ரீமேக் ஆகும். ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் இன்று தமிழகம் முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
இந்நிலையில் தமிழக மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரது ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் இந்தப் படங்களை கொண்டாடி வருகின்றனர்.
தற்போது தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்ட் அமோகமாக போய்க் கொண்டிருக்கிறது. ‘வாரணம் ஆயிரம்’ தொடங்கி ‘வேட்டையாடு விளையாடு’, ‘3’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வரிசையில் கடந்த வாரம் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கும் பில்லா திரைப்படத்தின் வருமானம் கில்லியை விட எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.