மே மாதம் முதல் வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷின் வடகிழக்குப் பகுதியில் புயல் காற்றின் சுழற்சி மையம் கொண்டிருப்பதால் பீகார் முதல் நாகாலாந்து வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவக் கூடும்.
இதே போல் அசாமில் வடகிழக்குப் பகுதியில் மற்றொரு புயல் காற்றின் சுழற்சி நிலவுவதால் வங்களா விரிகுடாவின் மேற்குப் பகுதியிலிருந்து வடகிழக்கு இந்தியா வரை வலுவான காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு அருணாசலப்பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை அல்லது பனிப்பொழிவும், இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மே மாதம் 3-ம் தேதியிலிருந்து இந்தியாவின் வடமேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால், மே 3 முதல் 6-ம் தேதி வரையிலான காலத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட் உத்தராகண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் இடிமின்னலுடன் மிதமான மழை அல்லது பனிப்பொழிவு இருக்கக் கூடும்.
மேலும் இந்திய தீபகற்பத்தில் தென்பகுதியில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப்பகுதி தெலங்கானா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகாவின் உட்புறத் தென்பகுதி, கேரளா, மாஹே ஆகியவற்றில் மே 5 முதல் 8 வரை பரவலாக லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.
மேற்கு வங்கம், கிழக்கு ஜார்க்கண்ட், வடக்கு ஒடிசா, ராயலசீமா ஆகிய இடங்களில் மே 3 வரை அதிகப்பட்ச வெப்பநிலை 44 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும்.
தமிழ்நாட்டில் மே 1 முதல் 3 வரை வெப்ப அலை வீசக்கூடும். தெலங்கானா, உட்புற கர்நாடகா, கடலோர ஆந்திரப்பிரதேசம், ஏனாம் ஆகியவற்றில் அடுத்த 4 – 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும். இன்றும் நாளையும் கேரளாவிலும், இதே வெப்ப நிலை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.