மூதாட்டி ஒருவர் குடும்பத்தினரால் சாலையில் வீசிச் செல்லப்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான வீடியோ பரப்பப்பட்ட நிலையில், மூதாட்டி தானாகவே வீட்டை வந்தடைந்ததால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனார்பாளையத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சீதா. இவர் தனது சகோதரியை பார்ப்பதற்காக சென்ற நிலையில், வாழப்பாடி அருகே வழிதவறியுள்ளார்.
இந்நிலையில் குடும்பத்தினரால் மூதாட்டி சாலையில் வீசிச் செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டது.
இதனால் கவலையடைந்த அவரது குடும்பத்தினர் மூதாட்டியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மூதாட்டி சீதா, தானாகவே நைனார்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என மூதாட்டியின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். வழிதவறி சென்ற மூதாட்டியின் பெயரில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.