வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து 113 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தை நோக்கி சிறுவர்களும், இளைஞர்களும் படையெடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
கடந்த ஆண்டை விட வெப்பம் சுட்டெரிக்கும் என்பதால், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பல வழிகளை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
ஒரு சிலர், குளு குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, உதகை, கொடைக்கானல் என சுற்றுலாத்தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும், அடிக்கடி தண்ணீர் குடுப்பது , ஜூஸ், இளநீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை அருந்தி வெயிலை சமாளித்து வருகின்றனர்.
குறிப்பாக, வெப்பத்தில் இருந்து தப்பிக்க, நீச்சல் குளங்களை நோக்கி இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாளம் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னை மெரீனாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், காலை முதல் மாலை வரை ஹவுஸ்ஃபுலாக மாறி உள்ளது.
மாநகராட்சி நீச்சல் குளத்தில், நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறுவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், நீச்சல் குளத்தில் குளிக்க பலவகையான கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.
அதன்படி, 10 வயதுக்குள் இருப்பவர்கள், மது அருந்தியவர்கள், சட்டை பேண்ட் அணிந்து குளிப்பவர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெயிலை சமாளிக்க முடியாமல் நீச்சல் குளம் வந்துள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, தூய்மையாக வைத்துள்ளதாகவும் இளைஞர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நீச்சல் குளத்தில் குளிப்பது வேற லெவலில் உள்ளதாக தெரிவிக்கும் இளைஞர்கள், கூடுதல் நீச்சல் குளங்களை ஏற்படுத்தி தரவேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நீச்சல் குளத்தினை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது தற்போது பார்ப்போம்…
நீச்சல் குளத்தில் இரண்டு புறமும் கயிறுகள் அமைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் மாற்றம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
மேலும், வாரத்திற்கு ஒருமுறை நீச்சல் குளம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கத்திரி வெயில் வரும் 4 முதல் 29 வரை உச்சத்தை தொடும் என்பதால், நெருப்பு போல் கொதிக்கும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும்.