எப்போதும் போல் இந்தியாவின் தலைநகர் டெல்லி வழக்கமான பரபரப்புடன் விடிந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத புதிய பரபரப்பும் கவலையும் தொற்றிக் கொண்டது. அந்த பரபரப்புக்கும் கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்… இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு…
டெல்லியில் 100 பள்ளிகளுக்கு காலை அதிகாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தன. இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
உடனடியாக காவல்துறை உயரதிகாரிகள், வெடிகுண்டு சோதனை குழுக்கள், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுக்கள் மற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்கள் என எல்லோரும் சம்பவ இடத்துக்கு வந்து விட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள் மூடப்பட்டன.
டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் சுமன் நல்வா, “வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளுக்கு உரிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சந்தேகப்படும் படியான எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.
‘இது வெறும் புரளி என்பதால் மக்கள் இதற்கு பீதி அடைய தேவையில்லை’ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லி காவல்துறை, மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்புகள் மத்திய அரசின் உத்தரவின் படி தேவையான அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன.
டெல்லி துணை நிலைஆளுநர் வி.கே.சக்சேனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லி காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவுகளும், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
டெல்லி காவல்துறை முழுமையாக தயாராக உள்ளது என்றும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
பள்ளிகளுக்கு புரளி மின்னஞ்சலை அனுப்ப ஒரே ஐபி முகவரி பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி ரஷ்யாவை சார்ந்தது. மின்னஞ்சல் அங்கிருந்துதான் வந்ததா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் எந்த பள்ளியிலும் சந்தேகத்திற்குரிய எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நடக்கின்ற காலகட்டத்தில் ஒரே நாளில், பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.
யாரும் அச்சப்பட வேண்டாம். தேவையான பாதுக்காப்பு நடவடிககைகளை எடுத்துவருகிறோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.