ஜம்முவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த காரைக்காலைசேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் நிலையில், நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
காரைக்கால் மாவட்டம் நிரவியைச் சேர்ந்த பிரேம்குமார், கடந்த 11 ஆண்டுகளாக இந்திய – திபெத் எல்லை பாதுகாப்பு படையின் 47-வது படை பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய – சீனா எல்லை மலைப் பகுதியில், அதிக உயரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதனையடுத்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் இன்று விமானம் மூலமாக திருச்சி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான நிரவிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
பின்னர் பிரேம்குமாரின் உடல் நாளை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ராணுவ வீரர் உயிரிழந்ததைக் கேட்டு கர்ப்பிணி மனைவி உள்ளிட்டோர் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்துள்ளது.
















