திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரின் பெயர்களை, அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.
உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை திமுக அரசு வெளிக்கொண்டு வர வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.