வாழ்க்கை அழகானது என்றாலும் சமயங்களில் ஆபத்தானதும் கூட. ஒரு காலத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட சிலரின் முகத்தில் சட்டென்று கறை பூசி விடுகிறது வாழ்க்கை. பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவர் தள்ளாத வயதில் தினக் கூலியாக கட்டிட வேலை பார்த்து வருகிறார். யார் அவர் ? என்ன காரணம் ? என்பதை விளக்கும் செய்தி தொகுப்பு.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா. அழிந்து வரும் ‘கின்னரா’ என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர்களில் ஒருவர்.
கின்னாரா இசைக்கருவியை இசைப்பதில் புதியவர்கள் யாரும் வராத நிலையில் இவர் மட்டுமே எஞ்சியிருக்கிறார் என்பதுதான் உண்மை.
கின்னாரா என்பது வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியாகும். கின்னாரா இசைக்கருவியில் காலத்துக்கேற்ற மாற்றத்தை இவர் ஏற்படுத்தினார்.
அரிய இசைக்கருவியான ‘கின்னரா’வை புதிய வடிவில் மாற்றி, பாரம்பரிய இசைக்கலையைப் பாதுகாத்த இவரின் பணி எல்லோராலும் பாராட்டப்பட்டது.
கின்னாரா இசைக்கலைஞர் தர்ஷனம் மொகிலையாவுக்கு, மத்திய அரசு , கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
தர்ஷன் மொகிலையாவைப் பாராட்டிய அப்போதைய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவருக்கு, அரசு சார்பில் ஹைதராபாத்தில் ஒரு வீட்டு மனை ஒதுக்கிக் கொடுத்தார். மேலும் அந்த மனையில் வீடு கட்டுவதற்கான கட்டுமானச் செலவு மற்றும் இதர செலவுகளுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.
நடிகர் பவன் கல்யாணின் ‘பீமலா நாயக்’ திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தர்ஷன் மொகிலையா பிரபலமானார்
இந்நிலையில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற 78 வயதான தர்ஷன் மொகிலையாவின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. வருமானத்துக்காக , வேறு வழி இல்லாமல், ஹைதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் தினக் கூலியாக வேலை செய்து வருகிறார். எதனால் இந்த நிலைமை?
வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டுள்ள தமது மகனின் மருத்துவச் செலவுக்கு மட்டும் மாதந்தோறும் 7000 ரூபாய் செலவாகிறது.
பிறகு வழக்கமான மருத்துவப் பரிசோதனை செலவுகள் மற்றும் வீட்டு செலவுகள் என மாத செலவுகளுக்கே கஷ்ட படும் தர்ஷன் மொகிலையாவுக்கு அரசு சார்பில் வழங்கப் பட்டு வந்த மாதம் 10,000 ரூபாய் மானியம் அண்மையில் நிறுத்தப்பட்டு விட்டது.
ஏன் நிறுத்தப்பட்டது எனக் கேட்டதற்கு அரசு அதிகாரிகள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என கை விரித்து விட்டார்கள்.
1 கோடி ரூபாய் மானியத்துடன் ராங்காரெட்டி மாவட்டத்தில் அரசு ஒதுக்குவதாக சொன்ன 600 சதுர அடி இடமும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இன்னமும் நிலுவையில் இருக்கிறது என்று கண்கலங்குகிறார் தர்ஷன் மொகிலையா.