மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலின் பங்கு உறுதி செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
அப்போது, முறைகேடுகளை கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் ஆனது என்று கூறுவது விசாரணை அமைப்புக்கு அழகல்ல என அமலாக்கத்துறையை கண்டித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக கூறிய நீதிபதிகள், வழக்கை வருகிற 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனில் விடுவிக்கக்கோரிய மனுவை, உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ரத்து செய்து, அவரது நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.