அடுத்த 5 தினங்களுக்குள் தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 41 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழக உள் மாவட்டங்களில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸூம், கடலோரப்பகுதிகளில் 35 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸூம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மீனம்பாக்கத்தில் 38 புள்ளி 6 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 36 புள்ளி 1 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.