நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் எவ்வாறு பரவுகிறது, இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
ரேப்டோ என்னும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி மூலம் பரவுவதே ரேபிஸ் நோய். (NEXT) மனிதனைக் கடிக்கும் நாய் ரேபிஸால் பாதிக்கப்பட்டிருந்தால் கடிபட்டவருக்கும் வைரஸ் பரவும்.
ரேபிஸால் தாக்கப்பட்ட பூனை, ஆடு, மாடு, குரங்கு, குதிரை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் கடித்தாலும் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படும். ரேபிஸால் பாதிக்கப்பட்ட பாலூட்டி விலங்குகள் மனிதனைக் கடித்தால் அந்த வைரஸ் பரவும். இந்தியாவில் நாய்கள் மூலமாகவே பெரும்பாலும் ரேபிஸ் நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.
தடுப்பூசி போடப்படாத தெருநாய்கள் மூலம் அதிகம் பரவுவதால் ரேபிஸ் ‘வெறிநாய்க்கடி’ என்றழைக்கப்படுகிறது. ரேபிஸ் நோய் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
வெறிநாய் கடித்தவுடன் அந்தக் காயத்தின் வழியே மனிதனுக்குள் செல்லும் லிஸ்ஸா வைரஸ், தண்டுவடம், மூளைக்கு முன்னேறும். இறந்த விலங்குகளில் இருந்து ரேபிஸ் நோய் பரவ வாய்ப்புள்ளது.
வெறிநாய்க் கடியால் வரும் ரேபிஸ் நோயை குணப்படுத்தவே முடியாது. ரேபிஸ் நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். ரேபிஸ் நோயால் உயிரிழக்கும் பத்தில் நான்கு பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது ஓர் ஆய்வு.
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சலும் தலைவலியும் இருக்கும். பதற்றம், மார்பு மற்றும் தொண்டைப் பகுதி தசைகளில் நடுக்கம் ஏற்படும்.
‘ஹைட்ரோஃபோபியா’ எனப்படும் நீரைக் கண்டு அஞ்சி, வெறுக்கும் தன்மை தோன்றும். பிரகாசமான ஒளி மற்றும் அதிக ஒலியை பொறுத்துக் கொள்ள முடியாது.(NEXT) சித்தபிரமை, மனஅழுத்தம், கவனச்சிதறல் ஏற்படும். அளவுக்கு அதிகமாக உமிழ்நீர் சுரக்கும். உடல் உறுப்புகள் செயல் இழக்கும். ரேபிஸால் பாதிக்கப்பட்டு இரண்டு முதல் 10 வாரங்களுக்குள் இந்த அறிகுறிகள் தோன்றும்.
நாய் அல்லது பிற செல்லப்பிராணிகள் கடித்தால் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு 10 முதல் 15 நிமிடங்கள் காயத்தை கழுவ வேண்டும். 70 விழுக்காடு ஆல்கஹால், எத்தனால், பொவிடோன் ஜயோடின் பயன்படுத்தியும் காயத்தை கழுவலாம்.
முதலுதவி சிகிச்சை முடிந்தவுடன் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். கடித்தது வளர்ப்பு நாய் என்றால் அதற்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி பற்றிய விவரங்களையும் கொண்டு செல்ல வேண்டும். தெரு நாய் கடித்திருந்தால் குறைந்தது 10 நாட்களுக்காவது அதை கண்காணிக்க வேண்டும்.
மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சொல்லும் நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் நாய்க்கடிக்கு தொப்புளைச் சுற்றி ஊசி போடப்படுவதில்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
செல்லப்பிராணிகள் கடித்தாலோ, நகத்தால் பிராண்டினாலோ உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். செல்லப்பிராணி வளர்ப்போர் கட்டாயம் அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
வீட்டு விலங்குகளாகவே இருந்தாலும் அவற்றுடன் பழகும் போது கவனம் தேவை. செல்லப்பிராணிகளின் செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அவற்றை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.