நாடாளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு நடுவிலும் சுவாரஸ்யமான செய்திகளும் வருகின்றன. அப்படி ஒரு சுவாரஸ்யமான செய்தி தான் இது. பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையேயான போட்டியாக இந்தூர் தேர்தல் களம் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது அந்த தொகுதியில் என்பது சற்று விரிவாக பார்க்கலாம்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில், மத்திய பிரதேச மாநிலத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் , மொத்தமுள்ள 29 தொகுதிகளில் , மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் மத்திய பிரதேசத்தின் வர்த்தக தலைநகர் என்று சொல்லப்படும் இந்தூர் தொகுதி மிக முக்கியமான தொகுதியாகும் . 8 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்தூர் தொகுதி கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வசம் உள்ளது. மக்களவையின் சபாநாயகராக இருந்த பாஜகவின் சுமித்ரா மகாஜன் இங்கே 8 முறை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
2019 ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், பாஜகவின் ஷங்கர் லால்வானி 5.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் பங்கஜ் சங்வியைத் தோற்கடித்தார். 25.13 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தூரில் இந்த முறையும் பாஜக சார்பில் லால்வானி போட்டியிடுகிறார்.
திடீர் திருப்பமாக, வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஏப்ரல் 29ஆம் தேதி, காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் போட்டியில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் .
இது காங்கிரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. என்ன செய்வதென்று தெரியாத காங்கிரஸ் , வாக்குப்பதிவின் போது நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு தன் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.
நோட்டாவுக்கு வாக்களிக்க ஒட்டிய விளம்பரத்தை பாஜக கவுன்சிலர் சந்தியா யாதவ் கிழித்ததாக அவர் மீது காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது. ஆனால் அவரோ , ‘மனசாட்சியுள்ள குடிமகனாக இருக்க வேண்டிய கடமையைத் தாம் நிறைவேற்றியதாகவும், நோட்டாவை விளம்பரப்படுத்தும் போஸ்டரை ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து அகற்றியதாகவும் தெரிவித்தார் .
தேர்தலில், நோட்டாவுக்கு வாக்களிக்க சொல்வது, ஜனநாயக குற்றம் என்று கூறிய மத்திய பிரதேச பாஜக தலைவர் வி டி சர்மா, ‘25.13 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்தூரில் இந்த முறை பாஜக 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாநகராட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் இந்தூர் வாக்காளர்கள் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ள நிலையில், ஊழல்வாதிகள் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறார்கள் என்றும், நீங்கள் தேச நலனுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பாஜகவும் பதிலுக்கு பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.