தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு, ஏற்கெனவே 3 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளி ஆக்கியுள்ளதாகவும், அது போதாதென்று 150 சதவீதம் வரை சொத்து வரி மற்றும் வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு என தனது நிர்வாகத் திறமையின்மையினால், மக்கள் தலையில் சுமைகளை ஏற்றியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
இதே போல முத்திரை கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் முத்திரைக் கட்டண உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மக்கள் மீது சுமையை ஏற்றாமல் அரசின் வருவாயை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.