சி.எம்.ஆர்.எல் மெட்ரோ அதிகாரியை தாக்கிய நிலையில் பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் சி.எம்.ஆர்.எல் பணிக்காக தடுப்பு அமைத்து வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சி.எம்.ஆர்.எல் உதவி மேலாளர் வடிவேலு தலைமையிலான ஊழியர்கள் பணி மேற்கொண்டிருந்த போது, அவ்வழியாக மதுபோதையில் வந்த திரைப்பட பாடகர் வேல்முருகன் எந்த வித முன்னறிவிப்பு இன்றி சாலையில் பள்ளம் தோண்டி இருப்பதை கேட்டு ஊழியர்களை தகாத வார்த்தைகளாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் உதவி மேலாளர் வடிவேலுக்கும், பாடகர் வேல் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் உதவி மேலாளரை, வேல்முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த வடிவேல் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு பாடகர் வேல்முருகனை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாடகர் வேல்முருகனை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்த பாடகர் வேல்முருகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, அவரை எச்சரித்து, எழுதி வாங்கி பின் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.