கடலூர் அருகே தண்டுவட தசை திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற, 16 கோடி ரூபாய் நிதி உதவிக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.
கம்பளிமேட்டைச் சேர்ந்த சிவராஜ் – சிவசங்கரி தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தை கிருத்திக்ராஜ், பிறந்தது முதலே தண்டுவட தசை திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தைக்கு AVXS-101 என்ற ஊசி செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து உயிர் வாழ முடியும் என்றும், இதன் விலை 16 கோடி ரூபாய் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது தவித்த சிவராஜ் – சிவசங்கரி தம்பதி, குழந்தையின் உயிரை காப்பாற்ற நிதியுதவி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.