தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால், தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கும் என்றும்,
ஜூன் ஒன்றாம் தேதி கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி விடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்,
தென்மேற்கு பருவமழையின்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.