உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரிடம் வேட்புமனுவைப் பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.
மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடும் பிரதமர் மோடி, வாரணாசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜலிங்கம் என்பவரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவர் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், கடந்த 2006-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2009-ம் ஆண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற இவர், உத்தர பிரதேச மாநிலத்திலேயே மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். உத்தரப்பிரதேச மக்களிடையே திறமையான அதிகாரியாக அறியப்பட்டுள்ள ராஜலிங்கம், கடந்த 2022-ம் ஆண்டு வாரணாசி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.
பிரதமர் மோடி ராஜலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.