ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – காசா இடையேயான போர் 7 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், காசாவின் ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா.வில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.
புனேவைச் சேர்ந்த வைபவ் அனில் காலே என்பவர், இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று, ஐ.நா. பாதுகாப்புத்துறையில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார். ரஃபா நகரில் சக அதிகாரி ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, வைபவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இத்தாக்குதல் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது. வைபவின் மரணத்தை இப்போதும் நம்பமுடியவில்லை எனவும், காசாவில் அமைதி திரும்புவதே வைபவின் அவரது தியாகத்திற்கான ஈடு எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.