வாரணாசி மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்ககோரி அய்யாக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாரணாசி மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த வாரம் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் ரயில் மூலம் வாரணாசிக்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்களை செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி முடிவடைந்ததால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு அளித்திருந்தார்.
அதில் அவர், வாராணசி மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை 20-ஆம் தேதி வரை நீட்டிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அய்யாகண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.