ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெங்கன் நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு .
உலகமயமாக்கல் வந்தபின் வேலை, கல்வி மற்றும் சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக அயல் நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஷெங்கன் விசா அதை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது.
சென்ற மாதம் ஷெங்கன் என்று அழைக்கப்படும் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாக செல்ல வழி வகை செய்யும் மல்டிபிள் என்ட்ரி அனுமதியுடன் கூடிய ஷெங்கன் விசா இந்தியர்கள் பெற அனுமதி அளிக்கப் பட்டது.
முதலில் 2 ஆண்டுகளுக்குத் தரப்படும், இந்தியர்களுக்கான ஷெங்கன் விசாவை, செல்லுபடியான பாஸ்போர்ட் இருந்தால், ஷெங்கன் விசாவை மேலும் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
புதிய விசா கிடைத்தவுடன் 90 நாட்கள் வரை ஷெங்கன் பகுதிகளில் இந்தியர்கள் சுதந்திரமாக செல்லமுடியும் என்றாலும், ஒரு பயணத்துக்கும் அடுத்தப் பயணத்துக்கும் இடையே 180 நாட்கள் இடைவெளி இருக்கவேண்டும். இதில் என்ன சலுகையென்றால்,மீண்டும் விசா எடுக்கவேண்டிய அவசியமில்லை.
ஒரே விசா மூலம் ஐரோப்பாவின் பெல்ஜியம், ஹங்கேரி, டென்மார்க், ஜெர்மனி, கிரீஸ், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ,ஆஸ்திரியா, போலந்து, போர்ச்சுக்கல், ருமேனியா, நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 29 நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதால், இந்தியர்கள் ஐரோப்பாவுக்குப் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
2022ம் ஆண்டு 6.7 லட்சம் விண்ணப்பங்கள் என்ற நிலைமாறி 2023 ஆம் ஆண்டு 9.7 லட்சம் விண்ணப்பங்கள் இந்தியர்களிடம் இருந்து வந்துள்ளதாகவும், இது 44 சதவீதம் வளர்ச்சி என்றும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டுக்கான ஷெங்கன் விசா விண்ணப்பங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமானவை சீனர்களிடம் இருந்து வந்துள்ளன. அதே நேரத்தில் , துருக்கியர்களும் அதிக அளவில் விண்ணப்பித்து, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் ஷெங்கன் விசா தேவை அதிகரித்து இருக்கும் நிலையில், விசா பெறுவதற்கான நேர்காணல் நேர ஒதுக்கீடு கிடைக்காததால் பல இந்திய பயணிகளின் பயணத் திட்டங்கள் சீர்குலைந்திருக்கின்றன
இது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல விண்ணப்பித்தவர்கள் மற்றும் சுற்றுலா பயண முகவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசா நேர்காணலுக்கான நேரம் கிடைக்காததால், குறித்த நேரத்தில் விசா கிடைக்காததன் விளைவாக பயணத் திட்டம் தள்ளிப் போகும். ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த விமானப் பயணம் ரத்தாகும் என்பதால், நிதி சுமையும் ஏற்படுகிறது என்று சுற்றுலாப் பயணிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
விசா குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் அந்தந்த நாடுகளின் தூதரக அலுவலகத்துக்கு கட்டுப்பட்டதாக இருப்பதால் எதுவும் பேசமுடியாது என்றும், அந்தந்த அதிகாரிகளின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் விசா செயலாக்க நிறுவனமான VFS குளோபலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஷெங்கன் நாடுகளில் பல நாடுகள் பயணத் தேதிக்கு 90 நாட்களுக்கு முன்பே விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தாலும், ஷெங்கன் விசா குறியீட்டில் உள்ள புதிய திருத்தங்கள், விண்ணப்பதாரர்கள் தங்கள் பயணத் தேதிக்கு 6 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
மேலும், விசா நேர்காணலுக்கான நேரம்,இடம், கிடைப்பதில் சிரமம் இருப்பதால் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
அடிக்கடி ஷெங்கன் நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு முன்னுரிமை தந்து குறுகிய கால விசாக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையும், புது பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே கடைசி நிமிட சிரமங்களைத் தவிர்க்க பயணிகள் 6 மாதங்களுக்கு முன்பே சரியாக நன்கு திட்டமிட்டுக் கொள்ளுமாறு பயண முகவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.