ஜோஹோவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் தலைவருமான ஸ்ரீதர் வேம்பு, செமி கண்டக்டர் உற்பத்தி தொழிலில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுத் திட்டத்துடன் தயாராக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜோஹோ சமர்ப்பித்த திட்டம் அரசு பரிசீலனையில் இருப்பதாகவும், மேலும் சில தகவல்களை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்….
மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக, கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள வணிகம் மற்றும் வர்த்தகங்களுக்கு மென்பொருளையும் அது தொடர்புடைய சேவைகளையும் வழங்கிவரும் ஜோஹோ நிறுவனம், தற்போது செமி கண்டக்டர் உற்பத்தி தொழிலில் இறங்கி இருக்கிறது. இதற்கான முதலீட்டுத் திட்டத்தை மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருக்கிறது.
ஜோஹோ நிறுவனம் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை செமி கண்டக்டர் தொழிலில் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதற்கான மானியத்துக்காவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
ஜோஹோ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, தனது எக்ஸ் பக்கத்தில், இந்த செமி கண்டக்டர் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு இன்றியமையாதது என்றும், மேலும் பல நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம், இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், தமிழக பாஜக ஸ்டார்ட் அப் பிரிவின் தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்டம் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனந்தன் அய்யாசாமிக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீதர் வேம்பு, தனது எக்ஸ் பக்கத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையைத் தென்காசியில் அமைக்க விரும்புவதாக, கோடிட்டு காட்டி இருந்தார். மேலும் செமி கண்டக்டர் துறையில் ஆனந்தனின் திறமை நிகரற்றது என்றும்,அவருடன் ஒன்றிணைந்து செயல்படப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
செமி கண்டக்டர் வடிவமைப்பில் காப்புரிமை பெற்றவர் இந்த ஆனந்தன் அய்யாசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம், செமி கண்டக்டர் உற்பத்தி தொழில் தொடங்குவதற்கு,15.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
தைவான் நிறுவனத்துடன் இணைந்து, டாடா நிறுவனம் தொடங்க இருக்கிற செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை, அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை மற்றும் தாய்லாந்தின் ஸ்டார்ஸ் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஜப்பானின் சிஜி எலக்ட்ரானிக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் குஜராத் மாநிலத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி பெற்றுள்ளன.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் . பிரதமர் மோடி குஜராத்தில் இரண்டு செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த தொழிலில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் இறங்கியுள்ளார். அவரின் ஜோஹோ நிறுவனம், 2023 ஆம் ஆண்டில் 8700 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது . இதில் 2800 கோடி ரூபாய் நிகர லாபம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
2030ம் ஆண்டு இந்தியாவின் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்துறையின் அளவு 150 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.