உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியை அதிகப்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக செயல் பட்டு வருகின்றன. இலக்கு ஒன்றாக இருந்தாலும் இருநாடுகளுமே வெவ்வேறு அணுகுமுறைகளை கையாளுகின்றன. மின்சார வாகனத்துறையில் இந்தியாவா ? அமெரிக்காவா ? யாருடைய அணுகுமுறை ஜெயிக்கும்? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக் ஷாக்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவற்றின் பதிவும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே நான்காவது பெரிய ஆட்டோமொபைல் துறையைக் கொண்டுள்ள இந்தியா, மின்சார வாகன உற்பத்தி மற்றும் சந்தை படுத்தல் நிலையிலும்,வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளில், சுற்றுசூழலைப் பாதுகாக்கவும், நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேலும் மக்களிடம் அதிகரிக்கவும் , வரிச் சலுகைகள், பொது EV சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக திகழ வேண்டும் என்பதற்காக, மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே மின்சார வாகனங்களை தயாரிக்க ,உலகப் புகழ் பெற்ற மின்சார வாகன உற்பத்தியாளர்களுடனும் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அண்மையில், 2024ம் ஆண்டில் சீன மின்சார வாகனங்களுக்கான கட்டண விகிதம் 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயரும் வகையில் இறக்குமதி வரிகளை அதிகரித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கத் தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றவும், மற்றும் நாட்டின் வணிகத்தைப் பாதுகாக்கவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்திருக்கிறது.
அதே நேரம், இந்தியாவோ, மின்சார வாகனத் துறையில் ,விதிமுறைகளுடன் கூடிய நூறு சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதாவது, இந்தியாவில் இ-வாகனத்தை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான மூன்று ஆண்டு காலக்கெடுவுடன் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 4,145 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
இது பற்றி இந்தியாவின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் கூறும் போது, புதிய EV கொள்கையின் கீழ் சீனா உட்பட எந்த நாட்டிலிருந்தும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதில் எந்த தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
ஒரு பக்கம் அமெரிக்கா, சீனாவை குறிவைத்து , இறக்குமதி வரிகளை அதிகரித்துள்ளது. அதே நேரம் இந்தியா இறக்குமதி வரிகளைக் குறைத்துள்ளது.
சமீபத்தில் சார்ஜிங் நிலையங்கள் தொடர்பான பிரச்சனை எழுந்த நிலையில் எலான் மாஸ்க் நிறுவனம் உள்ளட்ட சில நிறுவனங்களுக்கு கொடுத்திருந்த அரசு அனுமதியை அமெரிக்க அரசு ரத்து செய்தது. இது இந்தியாவுக்கு சாதகமாகவே அமைகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
EV பேட்டரிகளின் உற்பத்தியில் சீனா தான் முதலிடத்தில் இருக்கிறது என்றாலும் EV பேட்டரி உற்பத்திக்கு தேவையான லித்தியம் உலகிலேயே இந்தியாவின் காஷ்மீர் மலைப் பகுதிகளில்தான் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
370 சட்ட நீக்கம் கொண்ட வந்து பிறகு , EV பேட்டரி உற்பத்தியிலும் சாதனை படைக்க இந்தியா முயற்சி எடுத்து வருகிறது.
இன்னொரு புறம் , சீனாவின் MG வாகன நிறுவனத்துடன் சேர்ந்து, இந்தியாவின் SAIC மோட்டார் மற்றும் இந்தியாவின் JSW நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் EV கார்களை விற்பனை செய்வதை இலக்காக கொண்டு செயல் பட்டு வருகிறது.
இது மட்டும் இன்றி சீனா அல்லாத டெஸ்லா, வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்கின்றன.
இது புறம் இருக்க, 2025ம் ஆண்டில் ஒட்டுமொத்த தொழில்துறையில் இரு சக்கர மின்சார வாகனத்துறை 8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக திகழ வேண்டும் என்பதற்காக, மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே மின்சார வாகனங்களை தயாரிக்க ,உலகப் புகழ் பெற்ற மின்சார வாகன உற்பத்தியாளர்களுடனும் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
2023 ஆம் ஆண்டில், 5 லட்சத்து 80,000க்கும் அதிகமான மின்சார மூன்று சக்கர வாகனங்களை விற்று சீனாவை, இந்தியா முந்தியது என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.
சூரிய ஒளியில் இயங்கும் EV சார்ஜின் நிலையங்களை உருவாக்கி BHEL நிறுவனம் சாதனை படைத்துள்ளது. சூரிய ஒளியில் இயங்கும் 20 ev சார்ஜிங் நிலையங்கள் கொண்ட டெல்லி சண்டிகர் நெடுஞ்சாலையே மின்-வாகனத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்ட நாட்டின் முதல் நெடுஞ்சாலையாகும்.
செமி கண்டக்டர் உற்பத்தியில் இந்தியா இறங்கியிருக்கும் நேரத்தில் , மின் வாகன தொழில் துறையில் இந்தியா அமெரிக்காவை தாண்டி முன்னேறி செல்லும் என்பதில் சந்தேகமில்லை என்றே வாகனத் தொழில் துறை சார்ந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.