தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது.டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்,கும்பகோணம், அய்யம்பேட்டை , உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கன மழை காரணமாக குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நம்பியூர், வரப்பாளையம், கோரக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனழையால் குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் பாதுகாப்பாக வருவாய் துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், நத்தம் சுற்று வட்டார பகுதிகளான கோவில்பட்டி, வேலம்பட்டி, கர்ப்பநகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவில்பட்டியில் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதனால், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.