வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 24-ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, இன்று முதல் 25-ந் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இன்று தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகியமாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.