கபாலீஸ்வரர் கோவில் இடத்தில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம் ஆட்சேபம் பெறப்பட்டதா என்பது குறித்து நாளை விளக்கமளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் 26 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக உரிய அனுமதிகளை கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை அணுகியுள்ளதாகவும், உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானப் பணியும் மேற்கொள்ளப்படாது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம் ஆட்சேபம் பெறப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாளை விளக்கமளிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.