காவல்துறையினர் பேருந்தில் இலவசமாகப் பயணிக்க அனுமதியில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாங்குநேரியில் பயணச்சீட்டு எடுக்க முடியாது என வாக்குவாதம் செய்த காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற காவலர் ஆறுமுகப்பாண்டி, காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் பொழுது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவலர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை விளக்கமளித்துள்ளது. நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் பொழுது, பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.