பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 1993-ஆம் ஆண்டு எம்எல்ஏ-வாக இருந்தபோது தனது தொகுதியில், இந்திராகாந்தி வீடுகட்டும் திட்டத்தின்கீழ், 2 வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
வெறும் 2 வீடுகளை ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் எப்படி பகிர்ந்தளிப்பது என அந்த அதிகாரியிடம் தான் கேட்டதாகவும் நட்டா தெரிவித்தார்.
ஆனால், இன்றைக்கு பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், பஞ்சாயத்துக்கு தலா 50 வீடுகள் வீதம் கட்டப்பட்டிருப்பதாகவும் நட்டா பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள் பெறும் நோக்கில், 2 லட்சம் பஞ்சாயத்துகளில் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.