இவ்வுலக உயிர்கள் எல்லாம் இறைவன் முன்னால் சமமானவையே என்றும், பாரபட்சம் அற்ற இறைவன்,எல்லா உயிர்களையும் சமமாகவே கருதுவான் என்பதை உணர்த்தும் ஒரு அற்புதக் கோயில் தான் கருவூர் திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு உள்ள ஏழு சிவத் தலங்களில் ஒன்றான பசுபதீஸ்வரர் கோயிலின் சிறப்பு பற்றி இப்போது பார்ப்போம்.
காவிரியின் கிளை நதியான அமராவதி ஆற்றங்கரையில் , கரூர் மாவட்டத்தில், நகரின் மையப்பகுதியில், பிரம்மாண்ட அமைப்புடன் இந்த பசுபதீஸ்வர் ஆலயம் திகழ்கிறது.
மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்று சிறப்புக்களை உடைய இந்த திருக்கோயில், முசுகுந்த சக்க்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது.
கருங்கல்லால் ஆன கொடி மரத்தில், ஒரு புறத்தில் புகழ்ச் சோழனார் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவின் சிற்பமும், அந்த பசுவின் கால்களுக்கு இடையே சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.
பதினெண் சித்தர்களில் ஒருவரும், சோழப் பேரரசர் இராஜராஜ சோழனின் குருவுமான கருவூர் சித்தர் வாழ்ந்த ஊர் இது என்பதால், இத் திருக்கோயிலில் கருவூர் சித்தருக்குத் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் சிவபெருமான் ஆனிலையப்பராக, பசுபதீஸ்வரராக அருள் புரிகிறார். இரண்டு தனித் தனி சன்னதிகளில் அம்பிகை காட்சி தருகிறாள்.
இச்சா சக்தி வடிவில் ஆனந்தவல்லி, அலங்கார வல்லி, கிருபா நாயகியாகவும், கிரியா சக்தி வடிவில் அலங்கார நாயகியாகவும் காட்சி தருகிறாள்.
பிரம்மாவின் கர்வத்தை அடக்க எண்ணிய நாரதர், காமதேனுவை இக்கோயிலில் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய சொன்னார். நாரதரின் அறிவுரைப்படி, காமதேனுவும், இந்த வஞ்சி வனத்துக்கு வந்து, புற்றுச் சிவலிங்கத்துக்குத் தன் பாலைச் சொரிந்து பூஜை செய்தது.
தவத்தால் மகிழ்ந்த இறைவன், காமதேனுவுக்குப் படைக்கும் ஆற்றலை வழங்கினார். ஆகவே இந்தக் கோயிலின் சுவாமி ஆனிலையப்பர் என்றும், பசுபதீஸ்வர் என்று அழைக்கப்படுகிறார்.
இதற்கு சான்றாக, இன்றும் இக்கோயிலின் சிவலிங்கத்தில் பசுவின் குளம்பு பதிந்த அடையாளம் தெரிகிறது.
பிரம்மாவும் தன் தவற்றை உணர்ந்து, இங்கே வந்து இறைவனை வணங்கி அருள் பெற்றான் என்று இக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.
பிரம்ம தீர்த்தம் , தாடாகை தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ள இந்த கோயிலில் வஞ்சி மரமே தலமரமாக அமைந்துள்ளது.
7 அடுக்குகளுடன்120 அடி உயரமான ராஜ கோபுரம் தாண்டி கோயிலுக்குள் சென்றால், இரன்டு பிரகாரங்கள் உடைய இக்கோயிலில், காண வேண்டிய இன்னொரு இடம், வந்தாரைக் கவரும் விதத்தில் கட்டப்பட்டுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகும். இது புகழ்ச் சோழர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 14 ,15,16, ஆகிய மூன்று நாட்களிலும் சூரியக் கதிர்கள் மூலவரான பசுபதீஸ்வரர் மீது விழுவதைக் காணலாம்.
63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழனார் ஆண்ட ஊரான இந்த கரூரில் தான் எறிபத்த நாயனார் என்பவரும் அவதரித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
பங்குனி உத்திரம் பெருவிழா, ஆருத்ரா விழா மற்றும் மாத பிரதோஷம், மாத சிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
கரூர் பசுபதீஸ்வரரை வணங்கினால், மனஅமைதி கிட்டும் என்கிறது தலபுராணம்.
திருமணம், வேலைவாய்ப்பு ,தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகிய வேண்டுதல்களுக்காக இன்றும் பல பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.