தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்து செல்லப்படும் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்பட கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நன்கு விசாரித்து பணிக்குச் செல்ல வேண்டுமென அயலகத் தமிழர் நலத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அயலக தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காம்போடியா, மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு தகவல் தொழில்நுட்பப் பணி என்ற பெயரில், சுற்றுலா விசாவில் இளைஞர்களை அழைத்து சென்று சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்துவதாக எச்சரித்துள்ளது.
சட்டவிரோத இணையதள பணிகளை செய்ய மறுக்கும் இளைஞர்கள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் அயலக தமிழர் நலத்துறை எச்சரித்துள்ளது.
லாவோஸ் நாட்டில் சுற்றுலா விசாவில் பணி புரிய முடியாது என்றும், இதுபோன்ற குற்றங்களுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும் என்றும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறும் மோசடி கும்பலிடம் மாட்டிக் கொள்ளாமல் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அயலக தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.