பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரிக்கு வருகை தருவதை ஒட்டி விவேகானந்தர் மண்டபத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாள் 3 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வருகிறார்.
முன்னதாக பிற்பகலில் திருவனந்தபுரம் விமானநிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார்.
நாளை மறுதினம் முழுவதும் தியானத்தில் ஈடுபட்டு, மீண்டும் ஒன்றாம் தேதி நினைவு மண்டபத்தை விட்டு வெளியே வரும் பிரதமர் மோடி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் வருகையை ஒட்டி கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளிலும், அவர் தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதிகளையும் பாதுகாப்பு படை போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதேபோன்று கடலோர பாதுகாப்பு படை போலீசாரும், ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர். 500-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன் தினம் கேதர்நாத் பகுதியில் உள்ள குகையில் ஒருநாள் முழுவதும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.