கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை சார்ந்து இருக்க கூடாது என்று உலக நாடுகள் உணர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் அறிவுசார் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவைச் சார்ந்து இருக்கக்கூடாது என்று உலகம் விரும்புகிறது என தெரிவித்தார்.
கொரோனா காலக்கட்டத்தில் சீனா உட்பட சர்வதேச வர்த்தகம் நிறுத்தப்பட்டதாக கூறிய அவர், தற்போது உலக பொருளாதாரத்தில் ஜனநாயகமயமாக்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால், அனைவரும் சீனாவுக்குச் செல்ல வேண்டியதில்லை என கூறினார்.
மேலும், உலகளாவிய வணிகத்தை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்கான ஒரு புதிய வாய்ப்பாக டிஜிட்டல் துறையை மத்திய அரசு முன்னிலைப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக வணிகத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.